Thursday, August 27, 2009

கார்ல்ஸ்' மிக்ஸ்..


இந்தியாவில் இருந்த வரை அலுவலகத்தில் நம்ம ஆட்களோடு தான் எல்லாமே என்பதால் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நன்றாகப் புடுங்கிக் கொண்டிருந்தேன் - ஆணியை.. இங்கு வந்தவுடன் தான் ஆரம்பித்தது பிரச்சனை.. இவனுங்க பேசுறது ஒரு டாஷும் புரிய மாட்டேங்குது..

என்னோட டீம் மேனேஜர் ஒரு வயசான பாட்டி.. (வயசானா தான் பாட்டி'ன்னு எடக்கு மடக்கெல்லாம் வேண்டம் ப்ளீஸ்) நம்ம வயசுக்காரனுங்க பேசுனாலே புரியறது குதிரைக் கொம்பா இருக்குறப்ப இவங்களப் பத்தி சொல்லவே வேண்டம்..

திடீர் திடீர்னு 'ஆரன் ஆரன்'ன்னு பாட்டி கத்திட்டே இருக்கும்.. நடு ஆபிஸ்'ல ஏண்டா பாட்டி ஹாரன் அடிக்குதுன்னு யோசிச்சுட்டே வேலைய பார்த்துட்டு இருப்பேன்.. அப்பறமா பார்த்தா பக்கத்துல வந்து 'ஆரன், ஐ ஆம் காலிங் யு ஒன்லி'ன்னு சொன்ன அப்பறமாதான் அந்த 'ஆரன்' நான் தான்னு எனக்கு வெளங்கும்..

------------------------------------------------------------------------------------------------------

என் அலுவலகத்தில் நான் புடுங்கும் ஆணிக்கு சுத்தியல் வேறு ஒரு டீமிடம் தான் வாங்க வேண்டும் (அவனுங்க குடுக்குற பைல் தான் நமக்கு இன்புட்).. வந்த புதுசுல ஒருத்தனையும் தெரியாது.. அதனால குத்து மதிப்பாத்தான் கொஞ்ச நாள் பேசிட்டு இருந்தேன்.. நேர்ல பேசுனா கூட ஒரு வழியா அட்ஜஸ்ட் பண்ணிடலாம்.. போன்'லன்னா நம்ம கதை கந்தல் தான்..

இப்படி தான் ஒரு நாள் அந்த டீம்ல 'ஸ்டீவ் லைன்ஸ்'ன்னு ஒருத்தர் கூட பேச வேண்டி இருந்தது.. எந்தப் பிரச்சனையும் வந்துரக் கூடாதுன்னு சாமிய கும்புட்டுட்டு போன் பண்ணுனேன்..

ஹாய் ஸ்டீவ், ஐ ஆம் அருண்..

ஹலோ??

ஹாய் ஸ்டீவ், ஐ ஆம் அருண்..

ஹலோ?!?!?

அடடா, ஏழரை ஆரம்பிச்சுடுச்சு'ன்னு நெனச்சுட்டு மறுபடியும் சொன்னேன்..

ஹாய் ஸ்டீவ், ஐ ஆம் அருண்..

எஸ், ஹலோ.. ப்ளீஸ் ப்ரோசீட் பர்தர் என்றார், கொஞ்சம் கடுப்போடு..

அப்பறமா தான் புரிஞ்சது அது அந்த 'ஹலோ' என்று..

"ஹே, நீ எந்த எண்ணையச் சொன்ன" என்று வடிவேலு காமெடி டைப்பில் அட்ஜஸ்ட் பண்ணிப் போக வேண்டியதாய்ப் போயிற்று..

----------------------------------------------------------------------------------------------------

இதெல்லாம் கொஞ்ச நேரத்திற்குப் பிறகு நினைத்தால் சிரிப்பாக இருக்கும் விஷயங்கள்.. ஆனால் என்னை சிந்திக்க வைத்த ஒரு விஷயம் கூட சமீபத்தில் நடந்தது..

எங்கள் அலுவலகத்திற்கு எங்களை அழைத்துப்போக தினமும் ஒரு பேருந்து வரும்.. அது எங்கிருந்து வருகிறது என்று எனக்கு இன்று வரை தெரியாது.. ஆனால் எங்கள் இடத்திற்கு வரும் போதே நிரம்பி இருக்கும்.. கிடைக்கும் ஒரு சில இடங்களில் அமர்ந்து ஒரு வழியாகப் போய்விடுவோம்.. இதனால் எப்போதும் யார் பக்கத்திலாவது தான் அமர வேண்டியதாய் இருக்கும்..

எப்பவும் போல இங்கேயும் நம்ம தான் கடைசியா வந்து ஏறுவோம்.. அதனாலேயே என்னைக்கும் கிடைசி சீட் தான் நமக்குக் கிடைக்கும்.. சமயத்துல நின்னுட்டு கூட போக வேண்டியதா இருக்கும்.. அதே கடைசி சீட்ல எப்பவுமே ஒருத்தர் இருப்பாரு.. அட எப்பவுமே கடைசி சீட்ல இருக்காரே, ஒரு வேள நம்ம ஆளா இருப்பாரோன்னு ஒரு நாள் 'ஹாய்' என்றேன்.. ஒரு சின்ன சிரிப்புடன் தலையை மட்டும் ஆட்டினார்.. நானும் ஒன்றும் நினைத்துக்கொள்ளவில்லை.. ஆனால், மறுநாளும் இதே தான் நடந்தது.. அலுவலகத்தில் கூட எனக்குக் கொஞ்சம் தள்ளி தான் அமர்ந்திருப்பார், ஆனால் ஒரு நாள் கூட அவராக ஒரு முறை கூட சிரித்ததில்லை..

சரி, 'இது திமிர் புடிச்ச கேஸ் போல' என்று 7'G சுமன் ஸ்டைலில் நானே முடிவெடுத்தேன்.. அதன் பின்னர் அவரைப் பார்த்தல் நானே வேறு எங்காவது திரும்பிக்கொள்வேன்.. அவரருகில் மட்டுமே இடம் இருந்தால், நின்று கொண்டே சென்று விடுவேன்.. நாமெல்லாம் யாரு.. அப்படி கண்டிப்பா இந்த ஆளப் பார்த்து சிரிக்கணுமா என்ன?

இப்படியே போய்க்கொண்டிருக்கையில் ஒரு நாள் நடந்த டீம் மீட்டிங்கிற்கு அவரும் வந்திருந்தார்.. இவர் எங்கடா இங்க வந்தார் என்று எண்ணிக்கொண்டே உட்கார்ந்திருந்தேன்.. வழக்கம் போல் ஏதோ ஒரு நினைப்பில் நான் இருக்கையில், திடீரென அவர் பேச ஆரம்பித்தார்.. அப்போது தான் அந்தக் கொடுமையான உண்மையை உணர்ந்தேன்.. நம்மைப் போல் அவரால் ஒரு வாக்கியத்தைக் கூட முழுமையாய் ஒரே மூச்சில் சொல்ல முடியவில்லை.. அவ்வளவு திக்கியது.. ஆனாலும் கஷ்டப்பட்டு பேசினார்.. அப்போது அவரைப் பார்பதற்கே அவ்வளவு சங்கடமாக இருந்தது.. என் மீதே எனக்கு வெறுப்பாய் தோன்றியது.. ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை..

மீட்டிங் முடிந்து வெளியே வந்த பின் நானே அவரைப் பார்த்து லேசாக சிரித்தேன்.. அவர் எப்போதும் போல் சிரித்து விட்டு போய் விட்டார்.. ஒருவரின் வெளிப்புற தோற்றத்தை வைத்து அவரைப் பற்றி முடிவெடுப்பது எவ்வளவு பெரிய தவறு என்று அன்று தான் அனுபவத்தில் முதல் முறையாக உணர்ந்தேன்.. அன்று முதல் அவரை எப்போது பார்த்தாலும் சிரித்துவிட்டு ஒரு 'ஹாய்' சொல்லுவேன்.. இன்றும் அவரிடம் அதே சிரிப்பு மட்டும் தான்..

ஒருவர் என்னோடு எப்போதாவது சரியாகப் பேசவில்லை என்றால் நானெல்லாம் அன்றோடு அவர் பக்கம் திரும்புவதையே விட்டு விடுவேன்..அனால் அவரோ முதல் நாள் என்னைப் பார்த்து சிரித்த அதே சிரிப்பு தான் இன்று வரைக்கும்..

சிலர் என்றுமே மாறுவதில்லை.. இவர்களைப் போன்றவர்களிடம் நான் கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவோ உள்ளது..

Labels:

Thursday, August 20, 2009

என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கும் திரு. இளையதளபதி விஜய் அவர்களுக்கு.. Cont..


------------------------------------------------------------------------------------------------------
என் வாழ்க்கைப் பயணத்தின் ஒரு முக்கியமான திருப்புமுனையைப் பற்றி எழுத நினைத்து, அதனுள் என் வாழ்க்கைப் படகின் துடுப்ப்பாகிய அண்ணன் விஜய்யையும் சேர்த்து போய்க்கொண்டிருக்கும் இவ்வேளையில், எனக்குத் தொடர்ந்து ஊக்கமளித்துக்கொண்டிருக்கும் வலைக் கடலின் பதிவுத் துடுப்பாகிய அண்ணன் பரிசலுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்..
------------------------------------------------------------------------------------------------------

ஒரு விஷயத்த நோட் பண்ணுணீங்களா? விஜய்க்கு மட்டுமே யூஸ் பண்ணுன ப்ளூ கலர் இப்ப நம்ம அண்ணனுக்கும்.. :))



சரி சரி.. இனி ஓவர் டு நம்ம டாப்பிக்..

Technology வளராமல் இருந்திருந்தால் உலகம் எதை இழந்திருக்குமோ - அது எனக்குத் தெரியவில்லை. அனால் அது வளர்ந்ததினால் பாதிக்கப்பட்ட பல பேரில் நானும் ஒருவன்.. அதன் ஒரு வடிவமான மொபைல் தான் என் வாழ்விற்கு வேறு வடிவம் கொடுக்கக் காரணமாயிற்று..

எங்கள் கல்லூரியில் ஒரு சில Departments கல்லூரியின் Main Block'ஐ விட்டு கொஞ்சம் தொலைவில் இருக்கும்.. அதிலிருக்கும் ஒன்று நான் படிப்பது, ஒன்று அவள் படிப்பது.. அப்போது நான் Final Year. அவள் Third Year.. நான் Hosteler, அவள் Day Scholar..

அது ஒரு அக்டோபர் மாதத்து மழை நாள்.. எங்கள் கல்லூரி கேரளாவிற்கு பக்கம் என்பதால் சச்சின் படத்துல வர்ற மாதிரி தான்.. எப்பவுமே ஜில்'ன்னு இருக்கும்.. அதுவும் மழைக் காலம்னா கேட்கவே வேண்டம்.. எப்பவும் போல ஜம்ம்ன்னு டிரஸ் பண்ணிட்டு காலேஜ்'க்கு நடந்து கொண்டிருந்தோம்..


"குடையில்லா நேரம் பார்த்துக் கொட்டிச் செல்லும் மழையைப் போல

அழகாலே என்னை நனைத்து இதுதான் காதல் என்றாளே"

- மனதிற்குள் ஜெனிலியாவுடன் பாடிக் கொண்டிருந்தேன்.


அப்போது ஒரு குரல் - 'Haai'..

அட, அது அவள் தான்.. அவளை அங்கு நான் கொஞ்சம் கூட எதிபார்க்கவில்லை..

சட்டென்று பாடலில் ஜெனீலியாவிற்கு பதில் அவள் உருவம் தெரிய ஆரம்பித்தது..

நான் பதிலுக்கு 'Hi' சொல்லுவதற்குள் என் நண்பனொருவன்..

'யாருடா மச்சான், உன் தங்கச்சியா?' என்று அவளுக்கும் கேட்கும்படி என்னிடம் கேட்டான்..

'Cha cha.. என் பிரென்ட்'டா'.. நீங்க முன்னாடி போய்கிட்டிருங்க, நான் பேசிட்டே வந்துடுறேன்'டா..

எனக்கு அன்று நல்ல நேரம் என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.. யாரும் எந்த சேட்டையும் பண்ணாமல் அமைதியாய்க் கிளம்பினர்..

எப்பவுமே இந்த டைம்க்கு தான் போவீங்களா? - அவள்..

ஆமா, ஆனால் நான் உன்னை இந்த நேரத்திற்கு பார்த்ததே இல்லையே..

இன்னைக்கு பஸ் லேட் ஆயிடுச்சு.. இல்லனா ஒரு பத்து நிமிஷம் முன்னாடியே போய்டுவேன்.. நீங்க Hosteler தான? கொஞ்சம் முன்னாடியே கிளம்பக்கூடதா? ஏன் இப்படி கடைசி நிமிஷத்துல tension'a போகனும்?

லேட் ஆயிடுச்சுன்னா அப்படியே திரும்பி Hostel போயிடலாம்னுதான் என்று மனதிற்குள் நினைத்தாலும் 'இல்லேங்க, எப்பவுமே சீக்கிரமா போய்டுவேன்.. இன்னைக்கு தான் லேட் ஆயிடுச்சு'..

ஓஹோ.. அப்ப நாளைக்கு சீக்கரமா வந்துடுங்க..

அவள் கையில் வைத்திருந்த மொபைலைப் பார்த்தேன்.. உங்க Department Professor's எல்லாம் மொபைல் வச்சிருந்தா ஒன்னும் சொல்றதில்லையா.. (மனதிற்குள் - நம்பர் கெடச்சா நல்லா இருக்குமே..)

ஹ்ம்ம்.. அத ஏன் கேட்குறீங்க.. இதோட ரெண்டு தடவ மாட்டிகிட்டேன்.. உங்க செல் நம்பர் என்ன?

அட, நான் மனதிற்குள் நினைத்து இவளுக்கு கேட்டு விட்டதா? அவள் மிகவும் சாதாரணமாகக் கேட்டாள். எனக்குத்தான் இதயம் வேகமாகத் துடித்தது..

நோட் பண்ணிக்கோ என்று என் நம்பரைக் கொடுத்துவிட்டு, 'அதுக்கு ஒரு Missed கால் குடுத்துடு' என்றேன். இதற்குள் நாங்கள் எங்கள் கிளாஸ்'ஐ நெருங்கியிருந்தோம்..

''காதல் தான் வாழ்விலே ஏணி'டா..
ஆதலால் காதல் செய் மானிடா..''
--அசரீரி போல் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது..

மறுநாள்.. காலை எட்டு மணிக்கே நான் கிளம்பிவிட்டேன்..

அதே நண்பன் மறுபடியும் - எங்கடா கிளம்பிட்டே?

காலேஜ்'க்கு போறேண்டா..

அப்பறம் நாங்கெல்லாம் எங்க போகப் போறோம்? இரு, இருபது நிமிஷம் கழிச்சு போகலாம்..

இல்லடா, Department'ல ஒரு சின்ன வேலை இருக்கு..

ஓஹோ.. சரி சரி, போங்க சார் என்று சிரித்துக்கொண்டே கூறினான்.. இவன் வில்லங்கமானவன். ஏன்டா சிரிக்குற என்று கேட்டு நானே பிரச்சனையை வளர்த்துக்கொள்ள விரும்பாமல் 'சரிடா' என்று கூறிவிட்டு கிளம்பினேன்..

அன்று ஆரம்பித்தது.. லஞ்ச் பிரேக், கான்டீன், மிஸ்டு கால், மிட் நைட் கால், SMS என்று எங்களின் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது..இது போதாதென்று விஜய்'யும் தன் பங்கிற்கு அவரைப் பற்றி பேசச் செய்து காதலுக்குத் தான் எப்போதும் நண்பன் என்று மற்றுமொருமுறை எனக்கு நினைவுப்படுத்தினார்..

இப்படியே ஒரு வருடம் ஓடியது.. இதற்குள் நாங்கள் இருவரும் தனியே வெளியே செல்லும் அளவிற்க்கு எங்கள் நெருக்கம் கூடியிருந்தது..

இந்தக் கால கட்டத்தில் நானும் அடிக்கடி 'யூத்' விஜய் போல நடு இரவில் தூக்கம் வராமல் தவித்தாலும் இவன் மீது காலைப் போட்டு 'டேய், தூங்கிட்டியாடா' என்று கேட்க முடியாது.. அப்படியே என்றாவது ஒரு நாள் தப்பித் தவறி கேட்டுவிட்டால் என் மண்டை உடைந்து அவளை ஒரு சில மாதங்களுக்கு பார்க்க முடியாமல் போகும் அபயாம் உள்ளதால் நானே திரும்பித் திரும்பிப் படுத்து எப்பாடுபட்டாவது தூங்கிவிடுவேன்.

Einstine சொல்லிய 'Theory of Relativity' போல நாட்கள் அவளால் நிமிடங்களாய்ப் பறந்தது.. இந்த ஒரு வருடத்தில் நாங்கள் பார்க்கமலோ பேசாமலோ இருந்த நாட்களை எண்ணி விடலாம்..

இப்படியே போய்க்கொண்டிருந்த வேளையில் நான் கல்லூரியை விட்டுக் கிளம்பும் நாளும் வந்தது.. அப்போதெல்லாம் நாங்கள் பேசி முடிக்க எப்படியும் இரவு இரண்டு மணியாவது ஆகிவிடும்.. அந்த ஒவ்வொரு நாட்களும் அவள் என்னுடன் அழாமல் பேசியதேயில்லை.. உங்களுக்காக அழுவதற்கு ஒருவர் இருந்தால் கண்டிப்பாக என் நிலைமை உங்களுக்குப் புரியும்..

நான் கல்லூரியை விட்டுப் போவதற்கு சரியாக மூன்று நாட்களுக்கு முன்னால்.. எப்பவும் போல் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். அன்று அவளது பேச்சில் என்றுமில்லாத ஒரு வித தயக்கத்தை என்னால் உணர முடிந்தது.. அப்போது தான் நான் சிறிதும் எதிர்பார்க்காத அந்தக் கேள்வியை கேட்டாள்..

நான் ஒன்னு கேட்டா மாட்டேன்னு சொல்லக் கூடாது..

நீ சொல்லி நான் என்ன மாட்டேன்னு சொல்லிருக்கேன்?

நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?

திடீர் என ஒரு மின்னல் என் நெஞ்சில் பாய்ந்ததைப் போல் இருந்தது..

சரியா கேட்கல'டா என்றேன்..

நாம கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டேன்..

என்ன திடீர்னு இப்படி கேட்குற?

ரெம்ப நாளா கேட்கனும்னு நெனச்சேன்.. இப்ப தான் கேட்க தைரியம் வந்துச்சு..

நான் ஏற்கனவே உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டதாத் தான் நெனச்சுட்டு இருக்கேன்.. இது கொஞ்சம் பழைய dialogue தான் என்றாலும், சத்தியமாக நான் சொன்னது இது தான்.. ஏதோ ஒரு வேகத்தில் இதை நான் சொல்லிவிட்டாலும் எனக்கு இதயம் துடித்த வேகக்திற்கு ஒரு வேளை அது நின்று விடும் போல் இருந்தது.. அடுத்த ஒருசில நிமிடங்கள் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவே இல்லை..

அவளே அந்த மௌனத்தைக் கலைத்தாள்.. 'சரி, நாளைக்குப் பேசலாம்'..

ஏதாவது தப்பாக நினைத்து விட்டாளோ? ச்சே.. அப்படி எல்லாம் இருக்காது.. மனது நிலை கொள்ளாமல் தவித்தது..

கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தால் நன்றாக இருக்கும் போல் தோன்றியது..

'சரி.. காலையில கூப்பிடுறேன்'..

அன்று இரவு முழுவதும் நான் தூங்கவே இல்லை.. அவளும் தூங்கி இருக்க மாட்டாள் என்று நினைக்கிறேன்.. மறுநாள் காலை எட்டு மணி வரைக்கும் கூப்பிடவில்லை.. அன்று மதியம் அவளிடமிரிந்து SMS.. 'கேன்டீன்'ல சாப்பிடலாம்'.. சரி என்று பதில் அனுப்பிவிட்டு கேன்டீனுக்குச் சென்றேன்.. எனக்கு முன் அங்கு இருந்தாள் அவள்.. அந்த ஒரு வருடத்தில் ஒரு நாள் கூட அவள் முகத்தில் நான் பார்க்காத ஒரு வெட்கத்தை அன்று தான் முதன் முறையாகப் பார்த்தேன்.. அது அவளை மேலும் அழகாகக் காட்டியது.. அவளைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருந்தது..

காலம் நம்மைக் கடந்து போய்க்கொண்டு தான் இருக்கிறது என்பது நான் கிளம்பும் நாள் வந்த போதுதான் தெரிந்தது.. அன்று காலையிலிருந்தே அவளுடன் தான் இருந்தேன். மதியம் என் பெற்றோர் வருவதாக இருந்தது.. நேரம் ஓடிக்கொண்டே இருந்தது.. ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசிக் கொண்டோம்.. அவள் கை என் கையைப் பிடித்தே இருந்தது.. மணி 11 இருக்கையில் என் அப்பாவிடமிருந்து அழைப்பு.. 'கோயம்புத்தூர் வந்துட்டோம்டா.. இன்னும் அரை மணி நேரத்தில் வந்துவிடுவோம்'..

யாரு?

அப்பா..

என்ன சொன்னாங்க?

இன்னும் அரை மணி நேரத்துல்ல வந்துடுவாங்களாம்..

Arun, 'I Love you'.. என் கையை இருக்க பற்றினாள்..

Me too.. சொல்வதற்குள் எனக்கு அழுகையே வந்து விடும் போல் இருந்தது..

அதன் பின் எதுவும் பெரிதாக பேசிக்கொள்ளவில்லை.. அவள் அடிக்கடி அவள் கண்களைத் துடைத்துக்கொண்டிருந்தாள்..

என் பெற்றோரும் வந்து விட்டனர்.. தெரிந்த நண்பர்களிடம் பேசிக்கொண்டும் தெரியாதவர்களை அறிமுகப்படுத்திக்கொண்டும் இருந்தோம்..

அவளைக் காட்டி, 'இது .....'

அவளும் 'Hai Aunty, Hai Uncle' என்று சொல்லி ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். நான் என் ரூமிற்குள் சென்று என் Luggage'ஐ எடுத்து காரில் வைக்க ஆரம்பித்தேன்.. கொஞ்ச நேரத்தில் என் அம்மாவிடம் நன்கு ஒட்டிக்கொண்டாள்.. எல்லாம் முடிந்து நாங்கள் கிளம்ப ஆரம்பித்தோம்.. முகம் வாடி இருந்தாலும் சிரித்தபடியே என்னை வழியனுப்பினாள்..

காரில் பாட்டு ஓடிக்கொண்டிருந்தது..

''பிரிவொன்றை சந்தித்தேன் முதன் முதல் நேற்று..
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று.."

இது நடந்து இரண்டு வருடங்கள் ஓடி விட்டது.. நானும் சென்னை, புனே என்று வேலை நிமித்தமாக இடம் மாறிக்கொண்டே இருந்தேன்.. அனால் எங்களுக்குள் இருந்த காதலுக்கு இந்த தூர இடைவெளி ஒரு பிரச்சனையாக இருந்ததே இல்ல.. அதே Phone calls, அதே SMS..

அந்த இரண்டு வருடங்கள் என்னையும் அவளையும் நன்றாக மாற்றி இருந்தது.. என் மேல் அதிக உரிமை எடுத்துக் கொள்வாள்.. அவளைப் பற்றி நினைக்க எனக்கு 24 மணி நேரம் போதாமல் போனது. அவளைத் தவிர எதிலுமே மனம் ஒருமுகப்பட மறுத்தது.. ஆனால் இதக் கால கட்டத்தில் அடிக்கடி சின்னச் சின்னச் சண்டைகள் வர ஆரம்பித்தன..

நாட்கள் போய்க்கொண்டே இருந்தது.. அவளுக்கு வீட்டில் கல்யாணத்தைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள்.. எவ்வளவு நாட்கள் தான் இப்படியே இருப்பது என்று நானும் என் வீட்டில் சொல்ல முடிவெடுத்தேன்.. எப்பவும் போல என் அக்காவிடமே ஆரம்பிக்கலாம் என்று கொஞ்சம் கொஞ்சமாக சொல்ல ஆரம்பித்தேன்.. முதலில் எல்லா வீடுகளிலும் நடப்பதைப் போல திட்டு, ஆர்ப்பாட்டம் என இருந்தாலும், இறுதில் ஒரு வழியாக சமாதானப் படுத்தினேன்.. ஒரு வேளை, இவனையும் கூட ஒரு பொண்ணு விரும்புதேன்னு ஆச்சர்யப்பட்டு தான் என் அக்கா சமாதானம் ஆனாரோ தெரியவில்லை..

ஒரு வழியாக அக்காவை சம்மதிக்க வைத்தாகி விட்டது.. அடுத்த கட்டமாக அக்காவை தூதனுப்பி அத்தானிடமும் பேசச் சொன்னேன்.. அவரின் சம்மதமும் நான் எதிர்பார்த்ததை விட எளிதில் கிடைத்தது.. முதல் கட்ட பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடிந்த நிலையில் என் பெற்றோரிடம் இதைச் சரியான நேரத்தில் சரியான விதத்தில் சொல்ல காத்துக் கொண்டிருந்த நேரமது.. இந்த நேரத்தில் தான் அவளுக்கு வேலை காரணமாக மைசூர் செல்ல வேண்டி வந்தது..

எப்போதும் போல் பஸ் பயணத்தில் ஆரம்பித்து, ஊர் போய்ச் சேர்ந்து மறுநாள் காலை வேலைக்குச் செல்லும் வரை என்னோடு பேசிக்கொண்டிருந்தவளிடம் எந்ஒரு மாற்றத்தையும் அறியாத நான் அன்றிரவு தான் முதல் முறையாக ஒரு வித்யாசத்தை உணர்ந்தேன்..

என் பெற்றோரிடம் எப்படி எடுத்துச் சொல்லி சம்மதிக்க வைப்பது என்று நான் கணக்குப் போட்டுக் கொண்டிருக்க விதியோ என்னை வைத்து வேறு கணக்கு போட்டுக்கொண்டு இருந்தது..



தொடரும்..

Labels:

Sunday, August 16, 2009

என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கும் திரு. இளையதளபதி விஜய் அவர்களுக்கு..


மு. கு : இந்தப் பதிவு விஜய் அவர்களைப் பற்றியோ அவரின் பெருமைகளைப் பற்றியோ அல்ல.. இது முழுக்க முழுக்க என் வாழ்வில் அவரின் பங்கைப் பற்றியதே!.



விஜய் அவர்களை வெகு காலமாக எனக்குத் தெரிந்திரிந்தாலும், நான் அவரை உற்று நோக்க ஆரம்பித்தது 'பத்ரி'யில் இருந்து தான். அன்று ஆரம்பித்த அந்த வேகம், இன்றும் என்னுள் அப்படியே உள்ளது.. சொன்னால் நம்ப மாடீர்கள்.. குருவி படத்தை முதல் நாள் பார்ப்பதற்காக புனே'வில் இருந்து விமானம் மூலம் தமிழ்நாடு வந்தவன் நான்.. இது ஒவ்வொரு நடிகரின் ரசிகனுக்கும் இருக்கும் இயல்பான வேகம் தான் என்றாலும் நான் இங்கு சொல்லப் போவது அது பற்றி அல்ல.. இந்த வேகம் எவ்வாரெல்லாம் என் வாழ்க்கையை மாற்றியமைத்து இப்போது எந்த நிலையில் என்னை வைத்துள்ளது என்பது பற்றிய ஒரு சின்ன ஆய்வு தான் இந்தப் பதிவு..

இனி, ஸ்டார்ட் மியூசிக்..

"சர்ச்ச தேடித் போனதில்ல
பள்ளிவாசல் பார்த்ததில்ல
கோயில் குளத்தில விழுந்ததில்ல
நாங்க Bad Boys தான்"

..இப்படித் தான் ஆரம்பித்தது என் பள்ளி நாட்களும்

சில ரம்யாக்களும் பல திவ்யாக்களும் என் வாழ்வில் வந்து வந்து போன காலம் அது.. ஆனால் பெரிய பாதிப்பு என்று அப்போதெல்லாம் எப்போதுமே ஏற்ப்பட்டதில்லை.. அப்போதைய வருத்தமெல்லாம் ஓரிரு நாட்களோ அல்லது ஓரிரு வாரங்களோ தான்.. அதற்குள் அடுத்ததாக ஒரு அம்பிகாவை பார்த்திருப்பேன்..

நடு ரோட்டுல பாட்டி ஒருத்தி லிப்ட்'னு கேட்டு நான் அந்த சான்ஸ்'அ மிஸ் பண்ணியதே இல்லை, அது வீட்டில் பேத்தி இருக்கிறதோ இல்லையோ.. அப்படி எதுவும் இல்லனா கம்பெனிக்கு ஒன்னும் பெரிய நட்டம் இல்லை.. ஆனா ஒரு வேள இருந்துடுசுன்னா? எப்பவுமே கல்ல நாம எரிஞ்சுடனும், மாங்கா விழுதோ இல்லையோ.. அப்படியே ஒரு பொண்ணு இருந்தாலும் அது வந்து தேங்க்ஸ்'னு சொல்லி காபி குடுக்குறதெல்லாம்.. ஹி ஹி.. கஷ்டம் பாஸ்.. அதையும் தாண்டி அரவிந்தசாமி மேட்டர் எல்லாம்.. சரி,சரி.. அதெல்லாம் விடுங்க..

அதே போல், என் 'டாடி போடும் புல் ஹேன்ட் ஷர்ட்டுல' இருக்கும் சில்லறை தான் நமக்கு அப்போதைக்கு பாக்கெட் மணி..


இப்படியே போய்க்கொண்டிருந்த என் பள்ளி வாழ்க்கை ஒரு வழியாக பேப்பர் சேஸ் பண்ணியும் பிட்டு அடிச்சும் பாஸ் பண்ணி முடிவுக்கு வந்தது..
(எனது பள்ளி நாட்களில் நடந்த பல சுவாரஸ்யமான சம்பவங்களை தனிப் பதிவில் பார்க்கலாம்..)


நான் வாங்கிய மார்க்குக்கு கோயம்பத்தூரில் ஒரு கல்லூரியில் சீட் கிடைத்தது.. அந்தக் கல்லூரியின் அருமை பெருமைகளையெல்லாம் விட அந்தக் கல்லூரியில் அதிகம் பொண்ணுங்க கேரளாவில் இருந்து தான் வருவாங்க என்று என் நண்பன் சொன்னது மட்டும் தான் அப்போது ஜில்லென்று நினைவில் இருந்தது..

இனி.. ஓவர் டு காலேஜ்..

ஆல் தோட்ட பூபதியில் விஜய் சிம்ரனைப் பார்த்தவுடன் அப்படியே மேல பறக்க ஆரம்பிப்பாருல.. அந்த மாதிரி தான் நானும்.. விஜய் பிறந்த அந்த ஜூன் மாதத்தில் - கல்லூரிக்குள் பாதம் பட்ட முதல் நாளே நானும் பறக்க ஆரம்பித்தேன்..

கேரளாப் பொண்ணுங்க.. அட அட அடா.. சிம்பிள்'ஆ சொல்லனும்னா
'MTV பிகரு எல்லாம் எதிரில் வந்து நின்னா ஞாயமா..
LKG UKG படிக்கும் பையனுக்கு தாங்குமா'
என்று எனக்காகவே விஜய் பாடி இருப்பரோ என்று எண்ணத் தோன்றியது..


சிம்ரன்,த்ரிஷா என கோடம்பாக்கத்து தேவதைகள் வந்து கொண்டிருந்த என் கனவு ஸ்டேட் அப்டேட் ஆகி மீரா ஜாஸ்மின், பாவனா, கோபிகா என காட்ட ஆரம்பித்தது.. நாளாக நாளாக 'மனசுக்குள்ளே காதல் வந்துச்சோ' என்று கோபிகா என் கனவினில் நேரடியாகவே கேட்க ஆரம்பித்தார்.. அதான் நமக்கு எப்பவுமே வந்துட்டு தான இருக்கு.. நம்மள பார்குற பொண்ணுங்களுக்கு வருதான்னு கேட்டு சொல்லு என்று பதில் சொல்லி விடுவேன்..

எவ்வளவு தான் டாப்'ஆ டிரஸ் பண்ணிட்டு ஜம்முனு கிளம்பினாலும் கடைசியில சச்சின்'ல வடிவேலு சொல்ற மாதிரி 'ஹ்ம்ம்.. என்னடா பார்க்கக்கூட மாட்டேன்குராளுக' என்று நம் குரூப்'ல் யாரவது சொல்லும்படியாகத் தான் அது கடைசியில் முடியும்.. சரி, இதுக்கெல்லாம் அசருற ஆளா நம்ம.. அதான் விஜய் யூத்'ல 'பெர்சனாலிடிங்க்றது உடம்புல இல்ல, மனசுல தான் இருக்கு'னு' நமக்கவே சொல்லி இருக்காருல அப்படின்னு நாமளும் விடாம ட்ரை பண்ணிட்டே இருப்போம்..

இப்படியே 'கே.ஜி', 'அர்ச்சனா தர்சனா', 'கங்கா யமுனா' தியேட்டர்ல வர்ற நம்ம படத்த எல்லாம் பார்த்துட்டு காலம் நல்லாவே போயிட்டு இருந்தது.. விஜய் அஜித் படம் ரிலீஸ் ஆயிட்டே இருக்குற வரைக்கும் நமக்கு என்னைக்குமே தீபாவளி தான்.. திருப்பாச்சியில் 'நீ எந்த ஊரு.. நான் எந்த ஊரு.. முகவரி தேவையில்ல..' என்று விஜய் மறைமுகமாக அஜித்தின் 'முகவரி' படத்துக்கு ஆப்பு வைக்கிறார் என்று நாங்களும் எங்கள் பங்கிற்கு லொள்ளு சபா ரேஞ்சுக்கு பேசிக்கொண்டிருப்போம்.. இந்த கேப்'ல ஒரு வழியா மூணாவது வருஷத்துக்கும் வந்தாச்சு..

எங்க காலேஜ்'ல மூணாவது வருஷத்தோட ஆரம்பத்திலேயே கம்பெனி எல்லாம் வர ஆரம்பிச்சுடும்.. நான் பிளேஸ் ஆனது ரெம்ப லேட்டு தான் என்றாலும் அதிலும் ஒரு சரித்திர முக்கியத்துவம் உள்ளது.. என் கம்பெனி பைனல் லிஸ்ட்'அ முடிவு பண்ணி அதில் என் பெயரையும் சேர்த்து வாசித்து சரியாக ஜூன் 22'ம் தேதி நேரம் அதிகாலை 1.30 மணிக்கு.. எல்லாம் முடிந்த பிறகு செலக்ட் ஆனவர்களை ஓரிரு வார்த்தைகள் பேசச் சொல்லுவார்கள்.. நான் சொன்னது " I'am really happy that I got placed on this particularly day". வந்திருந்த HR ஒருவர் கேட்டார், "Whats so important today"?
நான் சொன்னேன் "Today is Vijay's Birthday".. உடனே அவர் சொன்னது, "Oh.. That Cine star.. I've heard about him".. இங்கே முக்கியமாக நோட் பண்ண வேண்டியது என்னவென்றால் அவர் வந்திருந்தது Noida'வில் இருந்து..

வேலையும் கெடச்சாச்சு.. இதுக்கு அப்பறமும் எதாவது சொல்லனுமா என்ன? நம்ம நண்பன் ஒருத்தன் கிட்ட பைக் இருக்கும்.. அதோட ஒரு சாவி எப்பயுமே நம்ம பாக்கெட்'ல தான்.. இன்னொரு நண்பன் டே ஸ்காலர்.. எல்லா வாரக் கடைசிலயும் பைக்'அ எதுத்துட்டு செகண்ட் சோ படம் எதாவது பார்த்துட்டு அவன் வீட்டுக்கு போய்டுவோம்.. அங்க மத்த ரெண்டு நாளும் ஒரே கூத்து தான்..

இப்படியே ஜாலியா போய்கிட்டுருந்த என் வாழ்க்கையை அப்படியே மாற்றியது ஒரு 'ஹலோ'..

எப்பவுமே நல்ல விஷயங்கள் தான் 'ஹலோ' சொல்லி ஆரம்பிக்கப்படும் என்று நான் அன்றுவரை நினைத்துக்கொண்டிருந்தது தப்பு என்று என்னைப் பின்னொருநாளில் உணரச் செய்த நாள் அது..

அது எங்க காலேஜ் ஸ்போர்ட்ஸ் டே நடந்து கொண்டிருந்த ஒரு மாலை நேரம்..

அவள் : ஹலோ..

நான் : ஹலோ..

அவள் : Congrats..

நான் : Thanks..

அவள் : Very good Performance.. Which Dept are you from?

நான் : Thanks again.. I'm from IT dept..

இப்படி ஆரம்பித்த அந்தப் பேச்சு வார்த்தைதான் என் வாழ்க்கையை திசை திருப்பப் போகிறது என்று நான் நினைக்க அப்போது காலம் எனக்குக் கற்றுத் தரவில்லை..

அந்த 'அவளை'ப் பற்றி..

(தொடரும்...)

Labels:

Wednesday, August 12, 2009

உதவும் இதயம் ஒரு நாளும் ஓயாது..

தய நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிட்சைக்காக உதவி வேண்டி காத்திருக்கும் பதிவர் சிங்கை நாதனுக்கு உதவும் உள்ளமிருப்பவர்கள் நண்பர் கே.வி.ராஜா எழுதிய இந்தப் பதிவைப் படிக்க விழைகிறேன்.

இது குறித்து அண்ணன் நர்சிம் எழுதிய பதிவை மறக்காமல் படிக்கவும்..

இந்தப் பதிவின் தலைப்பு அண்ணனுக்கு சமர்ப்பணம்..

சிங்கை நாதன் விரைவில் நலம்பெறப் பிரார்த்திப்போம்!

Labels:

Sunday, August 9, 2009

தண்ணி பார்ட்டி' க்கு வாங்க..




ஓம் கார்ல்ஸ்பெர்காய நமஹா..

இந்தப் பதிவு வால்ப்பையன் அவர்களுக்கு சமர்ப்பணம்..

இதை எனது குடும்பத்தினரோ எனது நெருங்கிய சொந்தமோ படிக்க நேருமானால் முதலில் டிஸ்கி 1'ஐ படித்துவிட்டு மேலும் தொடரவும்..

மற்ற அனைவரும் டிஸ்கி 2'ஐ படித்துவிட்டு மேலும் தொடரவும்..

இனி, வாங்க.. தண்ணிக்குள்ள குதிக்கலாம்..


இந்த தண்ணி மேட்டர்'அ எவன் முதல்ல கண்டுபுடிச்சானோ அவனுக்கு கோயிலே கட்டலாம்ங்க.. தண்ணிய போட்டுட்டு ஏதோ உளருறேன்'னு தப்பா நெனச்சுக்காதீங்க..மேட்டர் என்னன்னா, உலகத்துல ஓவராலா பார்த்தா தண்ணி தான் எல்லாமே.. டாஸ்மாக்'ல இருந்து தாஜ் வரைக்கும்.. இவளவு ஏன், இங்க 'யு கே' ல தண்ணி இல்லாத வீட்ட பார்கவே முடியாதுங்க.. சோ, இவ்வளவு தூரம் ரீச் ஆகுரதுன்ன சும்மாவா.. அதான் கோயில் மேட்டர் சட்டென்'ஆ ஸ்டிரைக் ஆச்சு.. என்னதான் டாஸ்மாக்'ல எப்பவும் கூட்டம் கியூ'ல நின்னாலும், டாப்'ஆ தண்ணி அடிக்குற முதல் பதினைந்து நாட்டுக்குள்ள இந்தியா இன்னும் வரலீங்க(2008 நிலவரப்படி).. ஆனா 'பாய்ஸ்' மங்களம் சார் சொல்ற மாதிரி தனித் தனி அப்ரோச்'ல எறங்குனா கண்டிப்பா நம்ம ஆதி'ணா, வால்பையன் தான் டாப் டூ அப்படிங்கறதுல எந்த வித சந்தேகமும் இல்ல..

நமக்கு பீர் தவிர வேற எதுமே தெரியாதுங்க.. அதனால பீர்'அ பத்தி நமக்கு தெரிஞ்ச ரெண்டு மூணு விஷயத்த சொல்லிடுறேன்.

உலகத்தில் உள்ள அதிமேதாவிகள் கண்டுபிடித்தவை..

1. ஆக்ஷிடேஷன் (இதுக்கு மருத்துவ ரீதியா தமிழ்'ல சொல்லணும்னா 'உயிர்வளியேற்றம்'. ஏனோ இப்ப எனக்கு சிவாஜி'ல ரஜினி காந்திமதிக்கு அவரோட வேலைய தமிழ்'ல சொல்ற காமெடி ஞயாபகத்துக்கு வருது) மூலமாக நமது உடலில் உற்பத்தியாகும் ப்ரீ ராடிகல்ஸ்'ஐ தடுப்பதில் பீர் முக்கிய பங்கு வகிக்கிறதாம்.. இதனால் கான்சர் போன்ற வியாதிகள் நம்மை அண்டாமல் பாதுகாக்கிறது..

2. கேடராக்ட் எனப்படும் கண் சம்மந்தப்பட்ட நோயை வராமல் தடுக்கிறது..

3. இதிலிருக்கும் வைட்டமின் B-6, 'ஹோமொசிஸ்டைன்' என்ற கெமிக்கல் நமது உடலில் உண்டாவதைத் தடுக்க பெரிதும் உதவுகின்றது. இதனால் இருதயம் சம்மந்தப்பட்ட நோய்களில் இருந்து நம்மைக் காக்கிறது..

4. முக்கியமாக - இதில் கொழுப்போ கொலஸ்ட்டிராலோ கிடையவே கிடையாது..

5. மேலும் நிம்மதியாக தூங்குவதற்கும் இது வழி வகுக்கிறது..

6. ஆஸ்திரியாவில் நடந்த ஒரு ஆராய்ச்சியில் பீரிலுள்ள 'ஹோப்ஸ்' என்ற பொருள் வயது முதிர்ச்சியை தடுக்கிறது என்று கண்டுபிடித்துள்ளனர்(வயதான பதிவர்கள் கவனிக்க)..


கீழ உள்ளதெல்லாம் நானே கண்டுபுடிச்சது..

1. இதுல பெரிய பிளஸ் என்னன்னா எவ்வளவு தான் குடிச்சாலும் பிளாட் ஆகி எங்கயும் கீழே விழுந்து மண்ண டேஸ்டு பண்ற வேலை இருக்காது..

2. அப்பறமா ஹார்டு அடிச்சா வர்ற பிரச்சன.. அதான் இந்த கிட்னி சட்னி ஆகுறது, கண்ணு அவிஞ்சு போறது, நுரைஈறல் நுரை தள்றது.. இந்த மாதிரி எதுவும் நடந்துடுமோனு பயப்படாம அடிக்கலாம்..

3. ரெம்ப முக்கியமா.. ஒரு வேள தப்பி தவறி வீட்டுக்கு தெரிஞ்சு பெரிய பிரச்சனை ஆனா கூட பைனல்'ஆ 'சரி, பீர் தான.. வேற ஒன்னும் பெருசா கேட்டுப் போகலலேல.. விடு விடு' அப்படினு வீட்ல யாரவது சொல்ல வாய்ப்பு இருக்கு.. (நல்லா நோட் பண்ணுங்கப்பா.. வாய்ப்பு இருக்குனுதான் சொல்றேன்)


இதுல என்ன ஒரே ஒரு பிரச்சனை'னா உங்க தொப்பை பல மடங்கு பெரிதாகுவதற்கு வாய்புகள் அதிகம்.. பட் அதையெல்லாம் ஜிம்'ல போய் கரெக்ட் பண்ணிக்கலாம் பாஸ்..


பைனல்'ஆ..

சரிவிகித அளவில் குடித்து வந்தால் அது நமது உலில் 'செரோடொனின்' எனப்படும் ''ஹப்பினஸ்'' ஹார்மோன்'ஐ கூட்டுகின்றதாம்.. ஏன்பா, சந்தோசமா இருக்கணும்னு யாருதான் நெனைக்க மாட்டாங்க?

'A Thing of Beauty is a Joy Forever' -- இது ஜான் கீட்ஸ் சொன்னது..

'A Mug of Beer is a Joy Forever' -- இதான் நான் சொல்றது..



அப்பறம் இன்னும் எதுக்கு வெய்ட்டிங்?? ரெடி ஜூட்..



டிஸ்கி 1 : இது முற்றிலும் கற்பனையே. இதற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. தப்பித் தவறி கூட என்னை சந்தேகப்பட வேண்டம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது (ஊரு நம்மள நம்புறதுக்கு என்னலாம் பண்ண வேண்டி இருக்கு)..

டிஸ்கி 2 : இந்தப் பதிவை படித்துவிட்டு நீங்கள் ஏதேனும் முடிவெடுக்க நேருமானால் அதற்க்கு நான் பொறுப்பல்ல..

Labels: